தமிழக நிகழ்வுகள்.
இன்று உங்கள் பார்வைக்கு.
பழநி: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதவியை பறிக்கக் கூடாது என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தமிழ்நாடு பிரமாண ஸமாஜம் சார்பில் நடைபெற்ற பிராமண குடும்ப ஸ்ம்மேளன நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ''கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் 130 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுகவைச் சேர்ந்த 16 பேரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இந்த சொத்து எங்கிருந்து வந்தது என்பதில் தான் ஊழல் உள்ளது.
குறிப்பாக, ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்பாக சர்ச்சை எழுந்தபோது, அந்த நிறுவனத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றார் மு.க.ஸ்டாலின். தற்போது ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் 142 மணி நேரம் வருமான வரித்துறை சோதனை நடந்துள்ளது. ஆனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வருமான வரித்துறை சோதனை நடத்தி எங்களை மிரட்ட முடியாது என்கிறார். ஊழல் செய்பவர்கள் தமிழக அமைச்சரவையில் இருக்க முடியாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினால் திமுக அமைச்சர்களே இருக்க முடியாது. புதிதாக அமைச்சர் ஆனவர்களிடமும் ஊழல் உள்ளது.
கடந்த 1976-ல் எப்படி ஊழலால் திமுக அரசு போனதோ, அதேபோன்று இந்த முறையும் திமுக அரசு ஊழலால் போகும். பொது இடத்தில் ஏடிஎம் இயந்திரம் போல் மதுபானம் விற்பனை செய்யும் இயந்திரத்தை திமுக அரசு வைத்துள்ளது. 34 ஆண்டுகள் மது என்றால் என்னவென்று தெரியாமல் இருந்த தமிழர்களை, 1971 ஆகஸ்ட் 31-ல் சாராயக் கடைகளை திறந்து விட்டு குடிமகன்களாக மாற்றியதும், தமிழர்களின் குடியைக் கெடுத்ததும் தான் திராவிட மாடல்.
இப்படி ஒரு மோசமான அரசு தமிழகத்தில் இருப்பது ஒவ்வொரு தமிழனுக்கும் மானக்கேடு. அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் என்ன காரணத்துகாக ஆடியோ வெளியிட்டாரோ, அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவரை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் எடுத்தார் என்றால், பழனிவேல் தியாகராஜன் சொன்னது உண்மையாகும். உண்மையை சொன்னதற்காகவே பதவியில் இருந்து எடுத்ததாக கருதப்படும். எனவே, அவரை அமைச்சர் பதவியில் இருந்து எடுக்க கூடாது. துறையையும் மாற்றக் கூடாது,'' இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் மதுரை செய்திகள்..
மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம்..சுகாதாரத்துறை அனுமதி அவசியம்..அமைச்சர் மா.சுப்ரமணியன்..
மதுரை: சித்திரை திருவிழாவின்போது இலவசமாக பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள், நீர்மோர் உள்ளிட்ட குளிர்பானங்கள் தரம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார். அன்னதானங்களை சுகாதாரத்துறை அனுமதி பெற்று தான் வழங்கவேண்டும் எனவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் சித்திரை திருவிழா கடந்த 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகமும், நாளைய தினம் திக் விஜயமும், மே 2ஆம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. 3ஆம் தேதி திருத்தேரோட்டமும், 5ஆம் தேதி சித்ரா பவுர்ணமி நாளில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும் நடைபெறும்.
பக்தர்களுக்காக பலரும் நீர் மோர், ரோஸ் மில்க், அன்னதானம் போன்றவைகளை வழங்கி வருகின்றனர். இந்த உணவுகள் சுகாதாரமான முறையில் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சித்திரை திருவிழாவிற்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மதுரை வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது அவர், மதுரை சித்திரை திருவிழாவில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு தொற்றுநோய் பாதிப்பு வராத வண்ணம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவிழாவை முன்னிட்டு மதுரையில் குடிநீர் சுகாதாரமாக வழங்க ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நகரில் கொசுத்தொல்லை இல்லாத வண்ணம் மாநகராட்சி மூலம் அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருவிழாவின்போது இலவசமாக பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள், நீர்-மோர் உள்ளிட்ட குளிர்பானங்கள் தரம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
அன்னதானங்களை சுகாதாரத்துறை அனுமதி பெற்று தான் வழங்கவேண்டும். இவர்கள் உணவு மற்றும் குளிர்பானங்களில் செயற்கை நிறமிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து தரமற்ற உணவுகளை விநியோகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார்.
கடந்த ஆண்டு 20 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு 56 இடங்களில் முகாம்கள் அமைக்கப்படும். தனியார் மருத்துமனைகள் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும் மதுரை செய்திகள்
புதுடெல்லி, இந்தியர்களின் முக்கிய விபரங்கள் திருடப்படுவதாகவும் அவ்வப்போது புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த விஷயத்தில் மத்திய அரசு கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்தியர்களின் தகவல்களை திருடும் செயலிகளை அறிந்து அதனை தடை விதித்து வருகிறது. இதுதவிர சீனா மற்றும் சீனாவுடன் தொடர்பு கொண்ட செயலிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் 14 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஐஎம்ஓ உள்ளிட்ட 14 மெசேஞ்சர் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தொடர்புடைய செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
இதில் மீடியா பயர், பிரேயர், பி சாட், கிருப்வைசர், எனிக்மா, செப் சுவிஸ், விக்கர்மி, நாந்த்பாக்ஸ், கோணியன், ஐ.எம்.ஓ., எலிமெண்ட், செகண்ட் லைன், ஜாங்கி, த்ரீமா ஆகிய 14 மெசஞ்சர் செயலிகள் அடங்கும்.
Comments
Post a Comment